ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பசுமையான சாலையில் இனி(மையான) பயணம்...
September 2, 2019 • M.Divan Mydeen

சென்னை தாம்பரம் - மாதவரம் புறவழிச்சாலையின் இரு ஓரங்களிலும் 22 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் மரக்கன்றுகள் முழுவதும் வளர்ந்து விடும் என்பதால் பசுமையை ரசித்தபடி இனி பயணிக்கலாம். மதுரவாயல் வழியாக மாதவரத்தையும் தாம்பரத்தையும் இணைக்கும் புறவழிச்சாலை 32 கிலோ மீட்டர் நீளம் உடையது. சாலை கட்டமைக்கும் பணிகள் 2010ஆம் ஆண்டில் முடிவுற்று அப்போதே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. புறவழிச்சாலை அமைக்கப்பட்ட போது ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. ஆனால் வெட்டப்பட்ட மரங்களைக் காட்டிலும் இரு மடங்கு மரங்கள் வளர்க்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்திருந்தது. இதற்காக தமிழக வனத்துறையுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் செய்திருந்தது. சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது அந்த புறவழிச்சாலையின் இரு ஓரங்களிலும் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் சமூக வனபாதுகாப்பு அதிகாரி மற்றும் கோட்ட வன அதிகாரி தலைமையில் சாலையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது பெருங்களத்தூர் பாலம் தொடங்கி புழல் வரை சாலையின் இரு ஓரங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. பெருங்களத்தூர் பாலம் அருகே முதற்கட்டமாக ஆயிரத்து 200 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மந்தாரை, நீர்க்கடம்பு நீர்மருது, புங்கன், நாவல் உள்ளிட்ட மரங்கள் நடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 6 அடி உயரம் வரை வளரக் கூடிய அந்த மரக்கன்றுகள் இரண்டு ஆண்டுகளில் வளர்ந்து விடும் என்றும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 22 ஆயிரம் மரக்கன்றுகளும் முழுவதும் நடப்படும் என்றும் வனத்துறை கூறியுள்ளது. 2020ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு வனத்துறையே நேரடியாக மரக்கன்றுகளை பராமரிக்கும் என்றும் அத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக போக்குவரத்து நடைபெறும் சென்னை புறவழிச் சாலையின் ஓரங்களில் அதிகமான மரங்கள் நடப்பட உள்ளதால் விரைவில் பசுமையான சாலையாக மாறும். எனவே பசுமையை ரசித்தபடியும், சுத்தமான காற்றை சுவாசித்தபடியும் இனி பயணிகள் இனிமையான பயணம் மேற்கொள்ளலாம்.