ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பா.ஜ., தலைவர்களாக பார்த்து பார்த்து சந்திக்கிறார் வைகோவிடம் திடீர் மனமாற்றம்
July 28, 2019 • M.Divan Mydeen

ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, ராஜ்யசபா எம்.பி., பதவி பிரமாணம் எடுத்த பின், டில்லியில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை, தன் குடும்பத்தினருடன் சந்தித்து, காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். தொடர்ந்து, மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, பா.ஜ., முன்னாள் அமைச்சர், யஷ்வந்த் சின்ஹா போன்றவர்களையும், வைகோ சந்தித்துள்ளார்.ஆனால், கூட்டணி கட்சியான, காங்கிரஸ் தலைவர்கள், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் போன்றவர்களை, வைகோ சந்திக்காமல் புறக்கணித்துள்ளதால், மத்திய அமைச்சரவையில், வைகோ இடம் பெறுகிறாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.விடுதலை புலிகளை ஆதரித்து பேசியது தொடர்பாக, வைகோ மீது, தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், வைகோவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.'தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு, ராஜ்யசபா எம்.பி.,யாக, பதவி பிரமாணம் செய்யக் கூடாது' என, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம், அ.தி.மு.க., - எம்.பி., சசிகலா புஷ்பா மனு அளித்தார். அவரை தொடர்ந்து, T.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தேசிய செயலர், எச்.ராஜா, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை போன்றவர்களும், 'பதவி பிரமாணம் செய்ய அனுமதிக்கக் கூடாது' என்ற கருத்தை வலியுறுத்தினர்.சரியாக, 23 ஆண்டுகளுக்கு பின், ராஜ்யசபாவில் காலடி எடுத்து வைக்கும் வைகோ, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காமராஜர், அண்ணாதுரை, பசும்பொன் முத்தராமலிங்கம், ஆர்., போன்ற தலைவர்களின் சிலைகளை தொட்டு, பயபக்தியுடன் வணங்கினார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர், மாறனின் சிலையை நிறுவ, எதிர்ப்பு தெரிவித்த வைகோ, அவரது சிலையின் கைகளை கோர்த்தப்படி நின்று, போட்டோவிற்கு காட்சி கொடுத்தார்.டில்லிக்கு செல்லும் முன், தன்னை கடுமையாக விமர்சித்த, சுப்பிரமணியசாமிக்கு பதிலடி கொடுக்க விரும்பாத வைகோ, சுப்பிரமணியசாமியை, 'ஆஹா, ஓஹா' என புகழ்ந்து பேசினார். டில்லியில் சுப்பிரமணியசாமியை சந்தித்தும், ஆரத் தழுவி வரவேற்றார்.சமஸ்கிருத மொழி குறித்து, எதிர்ப்பு தெரிவித்த வைகோ, தற்போது, 'மூத்த மொழி சமஸ்கிருதம்' என, ஆதரிக்க துவங்கியுள்ளார்.ராஜ்யசபாவில், வைகோ பதவி ஏற்ற பின், மூத்த தலைவர் அத்வானியை சந்தித்தார். அப்போது, அத்வானிக்கு பட்டு பொன்னாடை அணிவித்து, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.வைகோ மட்டுமல்ல, அவரது மனைவி, மகன் துரைவையாபுரி, அவரது மனைவி, பேத்தி என, அனைவரும் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.பா.ஜ.,வை விட்டு விலகியுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், யஷ்வந்த் சின்காவையும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் குடும்பத்தினரையும், வைகோ சந்தித்து பேசினார்.நேற்று முன்தினம், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, அவரது வீட்டில் தனியாக சந்தித்துப் பேசியுள்ளார்.வைகோவின் தொடர் சந்திப்புகள் குறித்து, அவரது கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:வைகோவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய, கோபம் அடையக் கூடியவைகோ, தற்போது பொறுமையை கடைபிடிக்கும் பக்குவம் அடைந்த தலைவராக செயல்படுகிறார்.தன்னை எதிர்த்து பேசிய, சுப்பிரமணியசாமியை பாராட்டி பேசுகிறார். வைகோவின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில், முக்கிய காரணம் ஏதோ உள்ளது என, ம.தி.மு.க., வினர் கருதுகின்றனர். அதாவது, எதிர்காலத்தில், மத்திய அமைச்சரவையில், தி.மு.க., இடம் பெறுமானால், அப்போது, வைகோவும் இடம்பெற விரும்புகிறார். எனவே தான், தன்னை எதிர்க்கிறவர்களை பதிலுக்கு எதிர்த்து, அவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தால், அமைச்சராகும் கனவுக்கு ஆபத்தாகி விடும் என, வைகோ கருதுகிறார். தி.மு.க., - காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவில், ராஜ்யசபா எம்.பி., பதவி ஏற்ற வைகோ, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை மட்டும் சந்தித்து, வாழ்த்து பெற்றாரே தவிர, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, மன்மோகன்சிங், ராகுல், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி போன்றவர்களை சந்திக்கவில்லை .தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ, ஏன் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க விரும்பவில்லை என்ற கேள்வியை, தமிழக காங்கிரசாரும் எழுப்புகின்றனர்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.