ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
பேனர் வைத்தால் ஓராண்டு சிறை..!
September 15, 2019 • M.Divan Mydeen

விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர்களை வைத்தால் குற்றவியல் நடவடிக்கையுடன், ஓராண்டு சிறை, 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேனர்கள் வைப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடிகள், கட்-அவுட்டுகள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக, உள்ளாட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் நிறுவக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்களுடன் மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவு விவரம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அரசியல் கட்சியினர் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் சில தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடை பாதைகளில் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் நிறுவன தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் டிஜிட்டல் பேனர்கள் அச்சிடுபவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் அவசர, அவசரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 20,000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.