ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
போதையில் ஓட்டினால் ரூ.10000 அபராதம்....
September 1, 2019 • M.Divan Mydeen

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் ரூபாயும், லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. கடந்த மாதம் 9ம் தேதி இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இப்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இதன்படி டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இனி 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். முன்பு இந்த அபராத கட்டணம் 500 ரூபயாகவே இருந்தது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராத தொகை இப்போது 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லைசென்ஸ் இல்லாமல் போதையில் ஓட்டினால் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்து வந்தனர். இனி ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். விபத்து ஏற்படுத்துவது போல ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வாகனங்களில் அதிக எடை ஏற்றிச் சென்றால் வெறும் 200 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அதன் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டினால் தண்டனையாக 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். இரண்டாவது முறையும் சிக்கினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டால் முதல் முறை 1000 ரூபாய் வரையிலும், இரண்டாவது முறை 2,000 ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகளுக்கு வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். இந்த விதிமீறலில் போலீசார் ஈடுபட்டால் 2 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும். விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் வரையிலும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் இழப்பீடு கிடைக்கும் வகையிலும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் அபராத கட்டண உயர்வு கடந்த மாதமே அமலாகி விட்டது குறிப்பிடத்தக்கது. இதன்படி சென்னையில் லைசென்சு இன்றி குடிபோதையில் வாகனம் ஓட்டிய விஷ்வா என்ற வாலிபருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தோஷ் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது