ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
மாமல்லபுரத்தில் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு..! ஏற்பாடுகள் தீவிரம்
September 18, 2019 • M.Divan Mydeen

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என சீனா தெரிவித்துள்ளது. சீனாவுடன் சுமூகமான உறவை மேம்படுத்த பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் ஊகான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28-ந் தேதிகளில் 2 நாட்கள் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைத்தார். அந்த அழைப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக் கொண்டார். அடுத்த மாதம் 2-வது வாரம் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை, பெங்களூர், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் உள்பட 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அவர்களது சந்திப்புக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இறுதியில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. மாமல்லபுரம் வர சீன அதிபரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரு நாட்டு அதிகாரிகளும் மாமல்லபுரத்துக்கு பல தடவை வந்து ஆய்வு செய்தனர். மோடி, ஜி ஜின்பிங் இருவரும் தங்கும் இடம், பேச்சுவார்த்தை நடத்தும் இடம், பொழுது போக்கும் இடம், போட்டோ எடுத்துக் கொள்ளும் இடம் ஆகியவை பற்றி பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந்தேதி இந்தியா வருகிறார். அவரது தனி விமானம் சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கும் அவரை, சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். இதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார்கள். மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிராமத்தில் உள்ள ஹெலிபேடில், ஹெலிகாப்டர் தரை இறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடிக்காக திருவிடந்தையில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. சீன அதிபர் வருவதால் அந்த ஹெலிபேடு தரம் உயர்த்தப்படுகிறது. திருவிடந்தையில் தரை இறங்கிய பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காரில் சுமார் 4.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவளத்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். கோவளத்தில் கடற்கரையை ஒட்டி உள்ள தாஜ் குழுமத்தின், சொகுசு வசதிகள் கொண்ட நட்சத்திர ஓட்டலில் மோடியும், ஜி ஜின் பிங்கும் தங்குகிறார்கள். கடற்கரையோரம் அமைந்துள்ள அந்த நட்சத்திர ஓட்டலில் மோடி, ஜின் பிங் தங்குவதற்கு, கடலை நோக்கி அமைந்துள்ள அறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தலா 40 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மூன்று அறைகளிலும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப அதிநவீன வசதிகள் உள்ளன. அங்கு பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த மூன்று அறைகளும் மேலும் அழகுப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் தேவையான உச்சக்கட்ட பாதுகாப்புக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அந்த ஓட்டலில், அக்டோபர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் மோடியும், ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்த சந்திப்பின்போது இந்தியா- சீனா இடையே உள்ள மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடியும் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், இரு நாட்டு வர்த்தகம் பற்றியும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதே நேரத்தில் இந்தியா-சீனா தலைவர்கள் சந்திக்கும் போது காஷ்மீர் விவகாரம் பற்றி எதுவும் பேசப்படமாட்டாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவளம் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் போது கடற்கரையை நோக்கி உள்ள புல்வெளி பகுதியில் அமர்ந்து டீ குடித்தப்படி மோடி- ஜி ஜின்பிங் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த புல்வெளியிலும், அருகில் உள்ள கடற்கரையிலும் இருவரும் நடந்து கொண்டே பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த ஓட்டல் புல்வெளி பகுதி மேலும் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. மோடி, ஜி ஜின்பிங் நடந்து செல்வதற்காக பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர ஓட்டலில் மட்டுமின்றி மாமல்லபுரத்தில் உள்ள புகழ் பெற்ற பல்லவ மன்னர்களின் கற்கோவில்களுக்கும் இரு நாட்டு தலைவர்களும் சேர்ந்து செல்ல உள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள சில அபூர்வ சிலைகளுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மாமல்லபுரத்தில் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் புகைப்பட எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அர்ச்சுணன் தபசு காட்சி, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவில் ஆகிய மூன்று இடங்களிலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு நடத்தினார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வர உள்ள நிலையில் அவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. நட்சத்திர விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. மோடி-ஜி ஜின்பிங் இருவரும் 12, 13-ந்தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகு ஒன்றாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். 13-ந்தேதி அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளனர். கோவளம் அல்லது சென்னையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் வருகையை முன்னிட்டு பல பகுதிகள் இப்போதே பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.