ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
முடங்கும் நிலையில் மூங்கில் பொருட்கள் தொழில்..!
September 9, 2019 • M.Divan Mydeen

மூங்கில் கைவினைத் தொழில் இந்த தலைமுறையோடு முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு தங்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கில், சொகுசு பங்களாக்கள் மட்டுமின்றி அனைத்து தர மக்களின் இல்லங்களையும் இயற்கை எழிலுடன் காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. பெரிய அளவிலான மூங்கிலை இரண்டாக பிளந்து, சீவி, பழக்கூடை, காய்கறிக்கூடை, பூஜை கூடை, பூச்செண்டு கூடை, சாம்பிராணி கூடை, இடியாப்பத் தட்டு, ஜன்னல் பாய், ஸ்கிரின் தட்டி, கோழிகளை வளர்க்க பயன்படுத்தப்படும் பஞ்சாரம், முறம் என பலவகை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தயாராகும் பொருட்களுக்கு தகுந்தவாறு கடினமான மற்றும் மிருதுவான மூங்கில்களை தனித்தனியாக தேர்வு செய்து மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் விதமாக இருக்கும் இந்த பொருட்களின் கலை நயமும், சீரான பின்னல்களும், வரிசை அமைப்புகளும் மனதைக் கொள்ளை கொள்பவை. இவ்வாறு வீடுகளை ரம்மியமாக மாற்றும் மூங்கில் பொருட்களை தயாரிப்பவர்களின் வாழ்க்கைத் தரம் என்னவோ இன்னும் உயரவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பிற்குப் பின்னர் கூட மூங்கில் பொருட்கள் மீது மக்கள் நாட்டம் கொள்ளாததே இதற்குக் காரணம் என்று கைவினைத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். கேரளா, கர்நாடகவில் இருந்து கொண்டுவரப்படும் மூங்கில்களை வாங்கி கூடைகள் முனைவதாகவும், மூங்கில் பொருள்கள் மழையில் நனைந்தால் அது கருப்பாக மாறிவிடும் என்பதால் உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை வாழ்வதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொழிலில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால், தங்கள் பிள்ளைகள் படித்து விட்டு வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டதாகவும் எனவே எதிர்காலத்தில் மூங்கில் கைவினைப் பொருட்களைச் செய்வதற்கு கைவினைக் கலைஞர்களே இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என்பது அவர்களது கவலையாக உள்ளது. மூங்கில் கைவினை பொருட்கள் தயாரிப்பு முடங்கும் நிலையில் உள்ளதால், மூங்கில் பொருட்கள் தயாரிப்புக்கான எந்திரங்கள் வாங்க அரசு வங்கி கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நடத்தும் பொருட்காட்சிகளில் கடை அமைப்பதற்கு அனுமதி வழங்கி, காதி கிராப்ட் மூலம் மூங்கில் பொருட்களை வாங்கி விற்க நடவடிக்கை மேற்கொண்டால், மூங்கில் கைவினைக் கலைஞர்கள் வாழ்வு பசுமையாக மாறும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடலுக்கு நன்மை பயப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, மூங்கில் கைவினைத் தொழிலை பாதுகாக்கும் வகையில் மக்களிடையே மூங்கில் பொருட்களின் பயன்பாடு அதிகரித்தால், தொழிலாளிகளின் வாழ்வாதாரம் வளருவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.