ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ராமநாதபுரம் - புதுவை 5 மணி நேரம் : அசத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்
September 3, 2019 • M.Divan Mydeen

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சென்னையில் ஒரு நாள் திரைப்பட பாணியில், ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு 5 மணி நேரத்தில் அதிவேகமாக அழைத்துச் சென்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காப்பாற்றியுள்ளனர். 15 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் கூட்டு முயற்சியால் இந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ராமநாதபுரம் அடுத்த அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த அமீர் என்ற 16 வயது சிறுவனுக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனின்றி இடது கால் செயலிழந்து வலியால் துடித்துள்ளார் அமீர். திங்கட்கிழமை அமீரின் நிலை மோசமானதை அடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக 8 மணி நேரத்துக்குள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். தாமதமானால் உயிருக்கே ஆபத்து என்று கூறவே, உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் விரைந்து வந்து அமீரை ஏற்றிக் கொண்டு மாலை 6 மணிக்குப் புறப்பட்டது. ராமநாதபுரத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஜாஸ் இந்த ஆம்புலன்ஸை ஓட்டி வந்தார். முன்னதாக நாகை, காரைக்கால், சீர்காழி, பரங்கிபேட்டை உள்ளிட்ட 11 ஊர்களில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் த.மு.மு.க சார்பில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் சாலையில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் இதுகுறித்த தகவல் பறந்தது. இதனையடுத்து சுறுசுறுப்பான அந்தந்தப் பகுதி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சிறுவன் அமீர் வரும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தனர். முன்னும் பின்னுமாக இரண்டு ஆம்புலன்களுடன் மின்னல் வேகத்தில் வந்துகொண்டிருந்த இஜாஸின் ஆம்புலன்ஸுக்கு முன்பு அந்தந்த ஊர்களில் உள்ள ஆம்புலன்ஸ்களும் சென்று ஊர் எல்லை வரை வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் இந்த கூட்டு முயற்சியால் ராமநாதபுரத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் இரவு 11 மணிக்குள் புதுச்சேரியை சென்றடைந்தது. சுமார் 366 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து, உயிருக்கு போராடிய இளைஞரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். வழக்கமான வேகத்தில் வந்தால் ஏழரை மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் அர்ப்பணிப்பும் வேகமும் மனித நேயமும் கலந்த இந்த செயல்பாடு, பலதரப்பட்டவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.