ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
வட்டாட்சியர் உள்ளிட்ட மூவரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர்
September 19, 2019 • M.Divan Mydeen

கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு பகுதியில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா, சிட்டா வழங்கியது தொடர்பான புகாரில் வட்டாட்சியர் உள்ளிட்ட மூவரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஒரு பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை கட்டப்பட்ட நிலையில் எஞ்சிய நிலம் காலியாக இருந்தது. அந்த நிலத்தை கையகப்படுத்தியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முந்தைய நில உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வளாகத்தில் உள்ள சில வீட்டு மனைகளுக்கு பட்டா, சிட்டா கோரி விண்ணப்பித்த சிலருக்கு வட்டாட்சியர் அமுதா, நில அளவையர் சித்ரா, முன்னாள் நில அளவையர் சாகுல் ஹமீது ஆகியோர் பட்டா, சிட்டா வழங்கியதாகவும், அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்த்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வட்டாட்சியர் அமுதா உள்ளிட்ட மூவரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.