ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
October 4, 2019 • M.Divan Mydeen

ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில், வங்கிக் கடன்களை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் செலாவணிக் கொள்கைக் குழு கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரெப்போ விகிதம் கால் சதவீதம் அல்லது 25 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் என்பது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் ஆகும். தற்போது இந்த விகிதம் 5.15 சதவீமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ, 4.9 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. ரெப்போ விகிதம் தொடர்ந்து 5ஆவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 135 அடிப்படை புள்ளிகள், அல்லது 1.35 சதவீதம் அளவுக்கு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், நுகர்வோர் விலைக்குறியீடு அடிப்படையிலான பணவீக்க விகிதத்தை 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துதல் என்ற நோக்கத்திற்கு இணங்கவும் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்திருப்பதன் மூலம், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றிற்கான வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வங்கிகள் குறைக்கும்பட்சத்தில் மாதாந்திர தவணைத் தொகைகள் குறையும்.